ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

காதலர் தினம், கேட்கும் போதே உதட்டில் மெல்லிய புன்னகை மலர்வதை உணர முடிகிறது.இது தேவை, தேவைஇல்லை என்கிற சர்ச்சைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு காதலை,உணர்ச்சிவசப்படாமல் பார்க்க முயல்கிறேன்.காதல் என்றால் என்ன ? ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பைத்தான் காதல் என்பதா? அப்படி பார்த்தால் ஒன்றாக பிறந்த ஒரு ஆணும் பெண்ணும் அன்புடன் இருப்பதை, ஒரு ஆணும் பெண்ணும் நட்புடன் பழகுவதை காதல் என்று சொல்ல முடியுமா? அப்போ காதல் என்பது என்ன? அன்பையும் கடந்து ஒரு ஆணும் பெண்ணும் உடலியல் ரீதியாய் கொண்டுள்ள நெருக்கத்தைதான் காதல் என்று சொல்வதோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் நெருக்கம்,மனிதன் நாகரீகம் அடைவதற்கு முன்பு இருந்தே தொடர்கிறது. எந்த ஒரு புறதூண்டுதலும் இல்லாத ஆதிமனித காலத்திலேயே மனிதன் உடலுறவு கொண்டு வந்திருக்கிறான். காதல் என்கிற சங்கதி பிறந்தது மனிதன் நாகரீகம் அடைந்த நவீன காலத்தில் தான். எனவே அறிவியலின் கூற்றுப்படி மனிதன் வாழ காதல் அவசியமில்லை. சமுதாயம் இந்த கூற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. விவரம் ஏதும் அறியாத விடலைப்பருவத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் ஈர்ப்பை சமுதாயமும் சரி அறிவியலும் சரி காதல் இல்லை இனக்கவர்ச்சி என்றே சொல்கிறது. பதினெட்டு வயதிற்கு பின் பக்குவம் அடைந்த பிறகு ஏற்படுவதே காதல் எனப்படுகிறது. இதுவரை சரிதான் ஆனால் வாழ்நாள் முழுவதும் ஜோடிகள் காதலுடன் வாழ்கிறார்கள் என்று கூறுவதுதான் சற்று மிகையாக தோன்றுகிறது. காதல் என்பது சாதாரணமாக திருமணம் வரைதான். அதன் பிறகு ஜோடிகளுக்குள் காதலின்போது இருந்த ஈர்ப்பு இருக்காது.காதல் என்கிற அந்த குறுகுறுப்பான திரில்லிங்கான உணர்வு இத்துடன் இங்கே முற்றுப்பெறுகிறது. அதன் பிறகு ஜோடிகளின் வாழ்கையை கொண்டு செல்வது, மிக சாதரணமாக குடும்பங்களில் ஒருவருக்கொருவர் செளுத்திக்கொள்ளும் அன்புதான். அந்த பரஸ்ப்பர அன்பைத்தான் ஜோடிகள் காதல் என்று அர்த்தம் செய்துகொள்கிறார்கள். இந்த காதல் திருமண வாழ்க்கை நெடுநாள் நீடிக்க பல காரணங்கள் இருக்கின்றன. தங்களது குழந்தைகள்,ஒன்றாக வாழ வேண்டிய கட்டாயம்,பொருளாதார சூழ்நிலை, பரஸ்பர புரிதல், சமுதாயத்தின் சொற்கள், ஜோடிகளின் விட்டுக்கொடுத்து போகும் தன்மை போன்ற பல காரணங்களே திருமண வாழ்க்கையை நீடித்திருக்க செய்கின்றன.விட்டுக்கொடுத்து போகாத தம்பதிகள்,ஒன்றாக சேர்ந்து வாழ அவசியமில்லாத பொருளாதார வலிமை உள்ளவர்கள்,மனம் கவர்ந்த வேறு ஒருவரை சந்தித்த பின், தம்பதிகள் திருமண வாழ்க்கை தோல்வி அடைகின்றன. இங்கே அவர்களது காதல் வேலை செய்யாமல் போய்விடுகின்றன. எந்த ஒரு சங்கதியையும் ஆழமாக ஆராய்ந்தால் அர்த்தம் இன்றி போய்விடுகிறது. காதல் என்பதும் நிலையில்லாத ஒரு மாயைதானா? உலகில் எதுவுமே நிலையில்லை என்கிறபோது காதல் மட்டும் விதிவிலக்கல்ல. எனினும் மிக குறைந்த நாட்களே இருந்தாலும் மனிதனை முழு பரவசத்தில் ஆழ்த்தும் காதலை மிக உற்சாகத்துடன் கொண்டாடுவோம். காதலர் தின வாழ்த்துக்கள்.

என் முதல் அறிமுகம்

mars embassy.ஏன் இந்த பெயரை தேர்வு செய்தேன்? இந்த பெயருக்கு பின்னால் ஏதோ மிகப்பெரிய கனவுகள் இருப்பதுபோல் தோன்றுகிறது, மிதமிஞ்சிய கனவுகள் காணும் என்னை இப்பெயர் கவர்ந்ததில் வியப்பில்லை.அதோடு செவ்வாயில் மனிதன் குடியேறும் வரையிலும் இந்த பெயருக்கு பங்கம் இல்லை. என் பெயர் பாலசுப்ரமணியம். படிப்பு-BBM. பிறந்த ஊர்-திண்டுக்கல். வளர்ந்த ஊர்-திருப்பூர். வாழும் ஊர்-சென்னை. மிக சராசரியான,சுயநலமான,குழப்பங்கள் நிறைந்த இளைஞன். வலைப்பூவில் அறிமுகம் நண்பன் மூலமாக[தேங்க்ஸ் டு ராதாமனாலன்] . மேலும் நல்ல நண்பர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். வாழ்க்கையில் எதிர்பாராத ஆச்சர்யங்கள் ஏற்படும் என்பதை நம்புகிறேன். நன்றி.